Select Your Favourite
Category And Start Learning.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பயிற்சி அமர்வுகள்.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 24 பிரதான பாடங்களுக்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக பயிற்சி அமர்வுகளை நடாத்துவதுடன், கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய கொரோனா நிலைமை மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக முறையாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுபோன மாண​வர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். அதன்படி,  தயாரிக்கப்படும் அடிப்படை பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் மாணவ குழுக்கள் முறைமையினூடாக கேள்வி பதில்களைக் கொண்ட மேலதிகக் கற்பித்தல் நடவடிக்கையின் மூலமாக பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தாமதமாகிய 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடத்தியதன் பின்னர், உயர்தரப் பரீட்சையை நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கும், அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விடுமுறை இன்றி நவம்பர் மாத இறுதி வரையில் பாடசாலைகளை நடாத்தி கைவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகளை சீர்செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது .

அதேவேளை தரம் 1 மற்றும் 2 இல் ஆரம்பக் கல்வியை இழந்து தரம் 3 இல் நுழையும் பிள்ளைகளின் தற்போதைய அடைவு மட்டங்களை அடையாளம் காண்பதற்கு விஞ்ஞான ரீதியிலான முறைமைகளினூடாக ஏற்கனவே ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளதோடு, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அம்மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கல்வி அமைச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவையின் 2018/2019 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் சம புள்ளிகளைப் பெற்ற 155 உத்தியோகத்தர்களுக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் அமைச்சர் இவ்வாறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

இதன்போது பாடசாலை போக்குவரத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘சிசுசெரிய’ பாடசாலை சேவைக்கு மேலதிகமாக, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக தனியார் பஸ்களை பயன்படுத்தி ‘பாசல் சேவய’ (பாடசாலைச் சேவை) எனும் பஸ் சேவையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயளாலர் என். எம். ரணசிங்க அவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment